கிருஷ்ணகிரி அருகே நாட்டாண்மைகொட்டாய் பகுதியில் முதல் போக நெல் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள விவசாய தொழிலாளர்கள். படம்: எஸ்.கே.ரமேஷ்வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கிருஷ்ணகிரியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம் ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வால் விவசாயிகள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி பகுதியில் நெல் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆட்கள் பற்றாக்குறை மற்றும் கூலி உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் மூலம் நேரடியாக 18 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் டிசம்பர் வரை, முதல்போக பாசனத்துக்கும், ஜனவரி முதல் மே மாதம் வரை 2-ம் போக பாசனத்துக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.

இதில், கிருஷ்ணகிரி அணையின் கீழ் 9012 ஏக்கர் விளைநிலங்களில் முதல் போக சாகுபடியை கடந்த ஜூலை மாதம் விவசாயிகள் தொடங்கினர். தற்போது அவதானப்பட்டி, மணி நகர், செம்படமுத்தூர், நாட்டாண்மைக்கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நெல் விளைச்சல் அதிகமாக இருந்தாலும், ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு உள்ளிட்டவற்றால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நாட்டாண்மைக் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் கூறும்போது, ‘‘வழக்கமாக முதல்போக சாகுபடி ஜூலை மாதம் முதல்வாரத்தில் தொடங்கப்படும். அக்டோபர் மாதம் அறுவடை முடிந்து, மீண்டும் நெல் நாற்றுகள் விடப்பட்டு, டிசம்பர் மாதம் 2-ம் போக சாகுபடி தொடங்குவது வழக்கம். நிகழாண்டில் அணையில் மதகுகள் மாற்றியமைக்கும் பணி நடைபெற்றதாலும், நீர் வரத்து குறைவாக இருந்ததாலும், ஜூலை மாதம் இறுதியில் தான் நடவுப் பணிகள் மேற்கொண்டோம். நெல் நடவு செய்யப்பட்ட போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் டிராக்டரில் தண்ணீர் வாங்கி வந்து, நெல்லுக்கு விட்டோம். மதகுகள் அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. பின்னர், தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, பாசனக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டது. தொடர்ந்து வந்த பருவமழை மற்றும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் தண்ணீர் பற்றாக்குறை நீங்கி, நெல்கதிர்கள் நன்கு விளைந்துள்ளன.

தற்போது நெல் அறுவடை பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையால் நிலத்தில் ஈரத்தன்மை உள்ளது. இதனால் இயந்திரம் மூலம் அறுவடை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அறுவடை பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். வழக்கம் போல் நிகழாண்டிலும் ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், உறவினர்கள் உதவியுடன் அறுவடை செய்து வருகிறோம். அறுவடை கூலியும் உயர்ந்துள்ளதால், வருவாய் குறைவாக கிடைக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்