தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் விருதுநகர் முதல் திருப்பூர் வரை 765 கிலோ வாட் உயர் மின் வழித்தடம்அமைக்கப்படுகிறது. இதற்காகவிளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்நிலையில், மேற்கண்ட திட்டத்தையும், இந்திய தந்தி சட்டத்தையும் எதிர்த்து பாதிக்கப்படும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கு நவம்பர் 21-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இப்பணியை மேற்கொள்ளும் தனியார் பெரு நிறுவனமானது மத்திய, மாநில அரசுகளிடம்கூட திட்டத்துக்கான அனுமதியை பெறவில்லை.
ஆனால், திட்டப் பணிகளை தொடர திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முன்நுழைவு அனுமதி வழங்கியுள்ளார் என்றும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் ஊத்துக்குளி, தாராபுரம் ஆகிய பகுதிகளில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
இப்போராட்டம், 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார் ‘இந்து தமிழ்'செய்தியாளரிடம் கூறும்போது, "இரண்டு இடங்களிலும் போராட்டத்தை வருவாய்த் துறைஅதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இவ்விவகாரத்தில், விவசாயிகளை பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அளிக்கப்பட்டுள்ள முன்நுழைவு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago