கிருஷ்ணா நீர்வரத்து, வடகிழக்கு பருவமழையால் 4 முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு 5.933 டிஎம்சி-யாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணா நீர்வரத்து மற்றும்வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய 4 ஏரிகளில் நீர் இருப்பு 5.933 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர மாநிலஅரசு சென்னைக் குடிநீர் தேவைக்காக, நடப்பு ஆண்டுக்கான கிருஷ்ணா நீரை கடந்த மாதம் 18-ம் தேதி முதல் திறந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 416 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், பூண்டி ஏரியில் நீர் இருப்பும் அதிகரித்து வருகிறது.

ஆகவே, பூண்டி ஏரியில் இருந்து, கடந்த 10-ம் தேதி முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும், கடந்த 25-ம் தேதி முதல் புழல் ஏரிக்கும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. 2 ஏரிகளுக்கும் விநாடிக்கு 800 கன அடி திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழையால் செங்குன்றம், சோழவரம், பூண்டி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிக அளவாக செங்குன்றம் பகுதியில் 12.8 செ.மீ.பெய்துள்ளது. ஆகவே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர் இருப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால், நேற்று காலை நிலவரப்படி 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் 29.05 அடியும், 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 15.28 அடியும், 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 18.21 அடியும், 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 2.85 அடியும் நீர் இருப்பு உள்ளது.

மொத்தம் 11.257 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பு 5.933 டிஎம்சியாக அதிகரித்துள்ளது என, பொதுப்பணித் துறைஅதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்