விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பாண்டு 6.3 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் மக்கள் விவசாயத்தைச் சார்ந்துள்ளனர். மாவட்டத்தின் இயல்பான மழையளவு 1,060 மி,மீ, ஆகும். வடகிழக்கு பருவமழையின் மூலம் சராசரியாக ஆண்டிற்கு 600 மி.மீ, வீதம் மழை கிடைக்கிறது.
மாவட்டத்தில் நடப்பாண்டு 6.30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் நெற்பயிர் 4.46 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயறு வகைகள் 58 ஆயிரம் மெட்ரிக் டன்னும், சிறுதானிய பயிர்கள் 1,24 லட்சம் மெட்ரிக் டன்னும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது சம்பா பருவத்தில் இதுவரை நெல் 41,000 எக்டரிலும், சிறுதானியங்கள் 16,920 எக்டரிலும், பயறு வகைகள் 8000 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பருவத்தில் பயிர் செய்வதற்கான விதைகள் மாவட்ட வேளாண் துறை சார்பில் அந்தந்த வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை, நெல் விதைகள் 536 மெட்ரிக் டன்னும் உளுந்து 221 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 13 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 144 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் நெல் விதைகள் 242 மெட்ரிக் டன்னும், உளுந்து விதைகள் 100 மெட்ரிக் டன்னும் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால நெல் ரகங்கள் 294 மெட்ரிக் டன்னும், கம்பு 13 மெட்ரிக் டன்னும், கேழ்வரகு 3 மெட்ரிக் டன்னும் சுத்திகரிப்பு பணிக்காக விதை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
யூரியா 6,700 மெட்ரிக் டன்னும், டிஏபி 2,100 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 4,200 மெட்ரிக் டன்னும், காம்ப்ளெக்ஸ் 7,500 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணையதளத்தில் விவசாயிகள் நெல் சம்பா பயிரை காப்பீடு செய்ய சம்மந்தப்பட்ட பொது சேவை மையங்களை அணுகலாம். இதனை நவம்பர் மாதம் இறுதிக்குள் காப்பீடு செய்திட வேண்டும் என விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago