ஜிப்மரில் அறுவை சிகிச்சை இல்லாமல் ரூ. 4.05 கோடி மதிப்பிலான அதிநவீன 'எலக்ட்ரோ ஷாக்வேவ் லித்தோட்ரிப்ஸி' கருவி மூலம் சிறுநீரக கற்கள் அகற்றும் சிகிச்சை முறை தொடங்கியுள்ளது. இது ஏழைகளுக்கு முற்றிலும் இலவசம்.
உடலின் வெளியே அதிர்வலை களை செலுத்தி சிறுநீரகங்களில் உண்டாகும் கற்களை உடைக்கும் அதிநவீன ‘எலக்ட்ரோ ஷாக்வேவ் லித்தோட்ரிப்ஸி' (டோர்னியர் டெல்டா 3) கருவி மூலம் சிறுநீரக கற்கள் அகற்றும் சிகிச்சை முறை முதல் முறையாக புதுச்சேரி ஜிப்மரில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
புதிய கருவி தொடர்பாக ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் சங்கர் படே பேசுகையில், “அறுவை சிகிச்சையின்றி சிறிது வலியுடன் சிறுநீரக கற்களை அகற்ற உரிய சிகிச்சை தர இந்த இயந்திரம் உதவும். உயராற்றல் மிக்க அதிர்வலைகளால் பெரிய கற்களை சிறிய துகள்களாக உடைத்து சிறுநீர் வெளியேற உதவும். உடலில் சிறு கீறல் இல்லாமல் சில மணி நேரத்தில் நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர். சிறுநீரக கற்கள் மட்டுமின்றி பித்தப்பை, கணைய கற்களையும் உடைக்கலாம்” என்றார்.
ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் கூறுகையில், “பெரியவர் களுக்கு மட்டுமில்லாமல் சிறியவர்களுக்கும், உடல் பருமன் உள்ளோருக்கும் இந்த இயந்திரத்தை பயன்படுத்தலாம். இந்த இயந்திரம் 'ப்ளோரோஸ்கோபி' மற்றும் 'அல்ட்ராசோனோகிராபி ஸ்கேன்' கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்லை உடைக்கும்போது கதிர்வீச்சு அபாயம் குறைக்கப்படும். சிகிச்சை நேரம் குறையும்” என்றார்.
துணை இயக்குநர் டாக்டர் அப்துல் ஹமீது கூறுகையில், “டோர்னியர் டெல்டா 3 சிஸ்டம் ரூ. 4.05 கோடி மதிப்புடையது. இது தென்னிந்தியாவில் முதல் முறையாக ஜிப்மரில் அமைந்துள்ளது. ஏழைகளுக்கு இந்த சிகிச்சை இலவசம். மற்றவர்கள் ரூ. 4 ஆயிரம் செலுத்தி இச்சிகிச்சையை பெறலாம்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago