கிராம வளர்ச்சித் திட்டத்தை வரும் ஜனவரி மாத இறுதிக்குள் தயாரிப்பதற்காக ஒவ்வொரு ஊராட்சியிலும் 6 பேர் கொண்ட கிராம திட்டமிடல் குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2021-22-ம் ஆண்டுக்கு கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்து, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து பேசும்போது, ‘‘கிராமத்துக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை கிராம மக்களே தீர்மானித்து, அரசுக்குத் தெரிவிப்பதே கிராம வளர்ச்சித் திட்டம். அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் அடுத்த ஓர் ஆண்டுக்கு ஒவ்வொரு கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்கும் தேவையான திட்டங்களை ஊராட்சி வாரியாக கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தில் சேர்க்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஊராட்சிக்கும் 6 நபர்களைக் கொண்ட கிராம திட்டமிடல் குழு அமைக்கப்பட்டு இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்படும்.
இக்குழுவின் மூலம் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து ஊராட்சிக்கும் இத்திட்டம் தயாரித்து முடிக்கப்பட வேண்டும் என்றார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர் பெரியசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராஜசேகரன் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago