வங்கியின் கதவை உடைத்து கணினி, மின்னணு சாதனங்கள் திருட்டு

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூரை அடுத்துள்ள மேலவாஞ்சூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தை, வங்கி வேலை நேரம் முடிந்தவுடன் பாதுகாப்பாக எடுத்துச் சென்று நாகூரில் உள்ள இந்தியன் வங்கியில் வைத்து விடுவது வழக்கம். இதன்படி, நேற்று முன்தினம் வங்கி வேலை நேரம் முடிந்தவுடன் கிளை மேலாளர் டார்வின் வங்கியை பூட்டிவிட்டு பணியாளர்களுடன் சென்று விட்டார். நேற்று காலை வழக்கம் போல உதவி மேலாளர் முத்துபிரசாத் வங்கியைத் திறந்தார். அப்போது, வங்கியின் பின் பக்கம் உள்ள மரக்கதவு, பூட்டுகளை உடைத்துவிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வங்கியில் இருந்த கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கிளை மேலாளர் டார்வின், உதவி மேலாளர் முத்துபிரசாத் ஆகியோர் நாகூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் உடனே வங்கிக்கு வந்து பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான தகவல்களைச் சேகரித்து அதனடிப்படையில் விசாரித்து வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து வங்கியில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வங்கியில் இருந்து மேலவாஞ்சூர் ரவுண்டானா வரை ஓடியது. ஆனால், யாரையும் பிடிக்கவில்லை. இதுகுறித்து நாகூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்