தஞ்சாவூர்: கரோனா தொற்றால் கடந்த அக்.18-ம் தேதி உயிரிழந்த, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மு.காந்தியின் படத் திறப்பு நிகழ்ச்சி ஒரத்தநாட்டை அடுத்த புதூரில் நேற்று நடைபெற்றது. காணொலிக் காட்சி மூலம் காந்தியின் படத்தை திறந்து வைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தற்போது நடைபெற்றுவரும் அதிமுக ஆட்சி தமிழகத்தின் சாபக்கேடாக இருக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் சட்டங்களுக்கு மத்திய பாஜக அரசுக்கு கும்பிடு போட்டு ஆதரவு தெரிவித்தார் தமிழக முதல்வர். விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லுக்கு அரசு கொடுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையே போதாது. அந்தக் குறைந்தபட்ச விலைக்கும் 3 வேளாண் சட்டங்களில் உத்தரவாதம் இல்லை. பஞ்சாப் மாநிலத்தில் குறைந்தபட்ச ஆதார விலைக்குக் கீழ் நெல் வாங்குவதற்கு தடை போட்டு சட்டம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அப்படி ஒப்பந்தம் போடும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை என்று அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற சட்டத்தை தமிழக சட்டப்பேரவையிலும் நிறைவேற்ற வேண்டும்.
ஆட்சிக்காலம் முழுவதும் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டு நானும் விவசாயி என்று கூறிக்கொண்டு முதல்வர் பழனிசாமி தயவு செய்து போலி வேடம் போட வேண்டாம். நாட்டின் முதுகெலும்புகளாக இருக்கும் விவசாயிகளைக் கொச்சைப்படுத்தாதீர்கள். பழனிசாமி ஆட்சி தமிழகத்துக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் செய்த ஆட்சி. இந்த ஆட்சி விரைவில் விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும். இந்த ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள், விவசாயிகள் கொண்டாடப்போகும் திருநாள் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago