பொள்ளாச்சி: ஆனைமலை அருகே நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு, அறுவடைக்கு தயாராக இருந்த ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்தன.
பொள்ளாச்சி அருகே ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் வேட்டைக்காரன்புதூர், ஒடைய குளம், செம்மணாம்பதி உள்ளிட்ட பகுதிகளில் 400 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 3 லட்சம் கதலி, செவ்வாழை, நேந்திரன் உள்ளிட்ட வாழை மரங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ஒரு லட்சம் வாழை மரங்கள், காற்றின் வேகம் தாங்காமல் வாழைத்தாருடன் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும் வேருடன் சாய்ந்து சேதமடைந்தன. ஆனைமலை பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில், திடீர் சூறாவளிக் காற்று, கனமழையினால் வாழை மரங்கள் சேதம் அடைந்தது, அப்பகுதி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து வேட்டைக்காரன்புதூரில் 4 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
வங்கியில் பயிர்க் கடன் பெற்றும், மனைவியின் நகைகளை அடகு வைத்தும் 4 ஏக்கரில் வாழை பயிரிட்டு இருந்தேன். 10 மாதம் வளர்ந்திருந்த வாழைகளுக்கு கோடையில் தண்ணீர் இல்லாததால் டிராக்டரில் தண்ணீர் வாங்கி ஊற்றி மரங்களை காப்பாற்றினேன்.
ஒரே நாளில், சில மணி நேரம் வீசிய சூறாவளிக் காற்று, கடும் மழையால் வாழை மரங்கள் சேதமடைந்தது. இதனால், வாங்கிய கடனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பில் சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. தோட்டக்கலைத் துறையினர் சேதமடைந்த வாழை மரங்களை நேரடியாக ஆய்வு செய்து அதற்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago