ஹெலிகாப்டர் விபத்து குறித்து - முகநூலில் அநாகரிகமாக பதிவிட்ட நபர் மீது 3 பிரிவுகளில் வழக்கு :

By செய்திப்பிரிவு

ஹெலிகாப்டர் விபத்து குறித்து முகநூல் கணக்கில் அநாகரிக முறையில் பதிவிட்ட நபர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த8-ம் தேதி நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகள், சந்தேகங்களை எழுப்பி சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவதூறு கருத்துகள், சர்ச்சைக் குரிய பதிவுகளை பதிவிடுவோர், பகிர்வோரை காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘நான்தான் பாலா’ என்ற முகநூல் கணக்கில்கடந்த 8-ம் தேதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது குறித்து சர்ச்சைக்குரியவகையில் செய்தி மற்றும் கார்ட்டூன் வெளியிடப்பட்டிருந் தது. அதற்கு பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் பகிரப்பட்டிருந்தன.

கோவை மாநகர போலீஸார் குறிப்பிட்ட முகநூல் பதிவை வைத்து விசாரித்ததில், சரவணம்பட்டியை சேர்ந்த கோவை பாலன் என்பவர் பதிவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து, மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அநாகரிகமான முறையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் முகநூல் கணக்கில் செய்தி வெளியிட்ட கோவை பாலன் என்பவர் மீது, அமைதியைகுலைக்கத் தூண்டுதல், இருவேறு வகுப்புகளுக் கிடையே தீய எண்ணத்தை உருவாக்கும் உரைகளை வெளியிட்டது உட்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்