மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்க காங். கோரிக்கை :

By செய்திப்பிரிவு

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரத்து செய்யப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சருக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைப்பிரிவு துணைத்தலைவரும், தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினருமான கே.என்.பாஷா அனுப்பியுள்ள மனு விவரம்:

கரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால், ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டது. தற்போது ரயில்கள் இயக்கம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கட்டணச் சலுகையை வழங்க வேண்டும்.

கரோனா பரவல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கோவை - ஈரோடு - சேலம், கோவை - ஈரோடு - நாகர்கோயில் பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளை கூடுதல் எண்ணிக்கையில் இணைக்க வேண்டும்.

சேலம் ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் ஈரோடு ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. போதுமான நடைமேடை இல்லாததால், ரயில் நிலையத்திற்கு வெளியில் ரயில்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஈரோடு ரயில் நிலையத்தில் ஐந்தாவது நடைமேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்