சென்னையில் 719 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த - 10,785 பேருக்கு ரூ.28.85 கோடி கடனுதவி : அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு வழங்கினர்

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 719 மகளிர் சுயஉதவிக் குழுக்களைசேர்ந்த 10,785 பயனாளிகளுக்கு சுயதொழில் புரிய ரூ.28.85 கோடி வங்கிக் கடனை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

பெண்கள் சுயதொழில் புரிந்து சமூகத்தில் தன்னம்பிக்கை, தன்மானத்துடன் வாழும் வகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. தமிழக முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, கடனுதவி வழங்கினார்.

தற்போது மாநராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 719 குழுக்களைச் சேர்ந்த 10,785 பயனாளிகளுக்கு சுயதொழில் புரிய ஏதுவாக ரூ.28.85 கோடி வங்கிக்கடன் உதவியும், பிஎம் ஸ்வா நிதி திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் தொழில் புரிய ஏதுவாக ஒரு பயனாளிக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 50 பேருக்கு ரூ.5 லட்சம் கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது, ‘‘கடந்த 10 ஆண்டுகளாகச் சோர்ந்து கிடந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ளன. முதல்வர் பதவியேற்ற 7 மாதத்துக்குள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,750 கோடி வங்கிக்கடன் உதவியை வழங்கியுள்ளார்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் தாயகம்கவி, எம்.கே.மோகன், ஆர்.டி.சேகர், த.வேலு, இ.பரந்தாமன், ஜோசப் சாமுவேல், ஜே.ஜே.எபிநேசர், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, ஐட்ரீம் ரா.மூர்த்தி, கா.கணபதி, அசன் மவுலானா, நகராட்சி நிர்வாக செயலர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கறே்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்