சென்னை கத்திப்பாரா மேம்பாலத்துக்கு கீழ் உள்ள இடங்களில் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன், மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பன்முகப் போக்குவரத்துகளை ஒருங்கிணைத்து, பயணிகள் ஒரு போக்குவரத்தில் இருந்து மற்றொரு போக்குவரத்துக்கு மாறிச் செல்வதற்கும், பொதுமக்கள், பயணிகள் இளைப்பாறி செல்லும் வகையிலும் இந்த சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
நகரின் அனைத்து பிரதான சாலைகளுடனும், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர், கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களுடனும் இது இணைக்கப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துடன் இப்பகுதி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சிறிய பேருந்துகள், இருசக்கர வாகன நிறுத்தங்கள், 8 பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றுடன் கைவினைப் பொருள் அங்காடி, உணவுக் கூடம், பசுமைப் பகுதியுடன் கூடிய சிறார் விளையாடும் இடம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
குளோவர் இலை வடிவமைப்பிலான மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ளதால், 4 பகுதிகளாக பிரிந்து இந்த இடம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சோலார் விளக்குகள், புல்வெளி விளக்குகள், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து புகைப்படங்கள், செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ் கூறும்போது, ‘‘ மக்களை கவரும் வகையில் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நுழைவுக் கட்டணம் இல்லை. இதை பராமரிக்கும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.வேறு பகுதிகளிலும் நகர்ப்புற சதுக்கம் அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். திட்டமிட்டபடி சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 3 புதிய வழித்தட மெட்ரோ ரயில் பணிகளும் 2026-க்குள் நிறைவடையும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago