பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு - வங்கி ஊழியர்கள் இரு தினங்கள் வேலை நிறுத்தம் : கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் ரூ.800 கோடி அளவில் பணப்பரிவர்த்தனைகள் முடக்கம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கடலூர்,விழுப்புரம், புதுச்சேரியில் ரூ. 800 கோடி அளவில் காசோலை உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வங்கி ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று, இன்று என இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தினை அறிவித்தது.

பொதுத்துறை வங்கிகள், மத்திய அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தோல்வி அடைந்ததால் திட்டமிடப்படி இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

இதன்படி பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்திலும் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். புதுச்சேரி யூகோ முதன்மை வங்கி முன்பு வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் நேற்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யூகோ வங்கி கன்வீனர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வங்கி சங்கங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கமிட்டனர்.

புதுச்சேரியில் மட்டும் 1,200 ஊழியர்கள் வரை இந்தப் போராட்டத்தில் பங்கேற்று உள்ளதால் இரண்டு நாட்களில் வங்கி பரிவர்த்தனை பணிகள் எதுவும் நடைபெறாது என்றும், இதனால் ரூ.500 கோடி அளவில் காசோலை உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை பணிகள் முடங்கும் என்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள196 வங்கி கிளைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 750 பேர் நேற்று பணியைபுறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் கடலூர் மாவட்டத்தில் சுமார் ரூ. 250 கோடி முதல் ரூ 300 கோடி அளவிலான பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களின் இந்தப் போராட்டத்தினால் பொதுமக்கள், வணிகள் கடும் அவதியடைந்தனர். போராட்டத்தைப் பற்றி அறியாத வாடிக்கையாளர்கள் சிலர் வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 130 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் சுமார் 1,300 ஊழியர்கள் நேற்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிக ளும் மூடப்பட்டிருந்தன. இதனால் சுமார் ரூ.20 கோடி பணப் பரிவர்த்தனை முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அனைத்து வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் மோகன் தலைவர் விழுப்புரம் நகரில் உள்ள இந்தியன் வங்கிக் கிளை முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 63 வங்கிக் கிளைகளில் பணியாற்றும் சுமார் 520 ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்