தனியார்மயமாக்கலை கண்டித்து - வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் :

தனியார்மயமாக்கல் நடவடிக்கையை கண்டித்து, சேலம் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் கோட்டை ஸ்டேட் பேங்க் வளாகத்தில் வங்கி தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் குணாளன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சம்பத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் கூறியதாவது:

இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.157 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை பொதுத்துறை வங்கிகள் கைவசம் இருந்தால்தான், அரசின் திட்டங்கள் செயல்படுத்த முடியும். ஆனால், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது. அந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி 1.50 லட்சம் பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். 96 சதவீதம் பேர் இப்போராட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளனர். நாளையும் (17-ம் தேதி) வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கவுள்ளது. போராட்டத்தால், சேலம் மாவட்டத்தில் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும், ரூ.1,000 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோட்டில் ரூ.600 கோடி...

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் 300-க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளில் பணிபுரியும் 2600-க்கும் மேற்பட்ட வங்கிப் பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் நரசிம்மன் கூறும்போது, ஈரோட்டில் 300-க்கும் மேற்பட்ட வங்கிகளில் வேலைநிறுத்தம் காரணமாக, ரூ.600 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வங்கி காசோலை பரிவர்த்தனை போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏடிஎம் மையங்களில் தேவையான பணம் நேற்று நிரப்பப்பட்டுள்ளது, என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE