சேலம் மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ள நிலையில் கூடுதல் நெல் கொள்முதல் மையங்கள் திறக்க வாய்ப்புள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நெல் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய மாவட்டத்தில் கடந்த 2019-20-ம் ஆண்டில் 5 நேரடி கொள்முதல் மையங்கள் செயல்பட்டன. தற்போது (2020-21) எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, சங்ககிரி அடுத்த தேவூர், காடையாம்பட்டி அடுத்த டேனிஷ்பேட்டை, கெங்கவல்லி அடுத்த இலுப்பநத்தம், தலைவாசல் அடுத்த புளியங்குறிச்சி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த புத்திரக்கவுண்டன் பாளையம் ஆகிய 7 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
கொள்முதல் மையங்களில், சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,888 உடன், ஊக்கத் தொகையாக ரூ.70-ம் சேர்த்து, குவிண்டாலுக்கு ரூ.1,958 விலை வழங்கப்பட்டது.
இதேபோல, பொது ரகம் நெல்லுக்கு ரூ.1,868 உடன், ஊக்கத்தொகை ரூ.50-ம் சேர்த்து குவிண்டாலுக்கு ரூ.1,918 வழங்கப்பட்டது. நடப்பாண்டு சன்னரக நெல்லுக்கு ரூ.1,960 உடன் ஊக்கத்தொகை ரூ.100-ம் சேர்த்து குவிண்டாலுக்கு ரூ.2,060, பொது ரகத்துக்கு ரூ.1,940 ஊக்கத் தொகை ரூ.75-ம் சேர்த்து குவிண்டாலுக்கு ரூ.2,015 என விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டு தென்மேற்கு மற்றும் தற்போது நிலவும் வடகிழக்குப் பருவமழைக் காலத்திலும் சேலம் மாவட்டத்தில் சராசரிக்கும் கூடுதலாக மழை பெய்துள்ளது. இதனால், மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி இருக்கின்றன. இவற்றைச் சார்ந்த பாசன பகுதிகளில், விவசாயிகள் பரவலாக நெல் பயிரிட்டுள்ளனர்.
மேலும், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதியும், மேட்டூர் அணை கால்வாய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 1-ம் தேதியும் என உரிய காலத்தில் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரி பாசனப்பகுதிகள் உட்பட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். எனவே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு நெல் மகசூல் அதிகரிக்கும் என்பதால், கூடுதல் நெல் கொள்முதல் மையங்கள் திறக்க வாய்ப்புள்ளது.
18,000 டன் நெல் கொள்முதலுக்கு எதிர்பார்ப்பு
வேளாண் துறை மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கடந்த ஆண்டு சன்ன ரக நெல் 6,969 மெ.டன்னும், பொது ரக நெல் 113 டன்னும் என மொத்தம் 7,082 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு 15,900 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.31.06 கோடி வழங்கப்பட்டது. மேலும், நடப்பு பருவத்தில் 18,000 டன் நெல் கொள்முதலுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, நெல் அறுவடை தொடங்கவுள்ள நிலையில், டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் மீண்டும் நெல் கொள்முதல் மையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கும். கடந்த ஆண்டுகளை விட கூடுதல் நெல் மகசூலுக்கு வாய்ப்புள்ளதால் தற்போதுள்ள 7 கொள்முதல் மையங்களுடன் கூடுதலாக 3 முதல் 5 கொள்முதல் மையங்கள் திறக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago