உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கரூர் எம்எல்ஏ அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்துவதற்காக திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று கரூருக்கு வந்தனர்.
சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது, விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு எதிராக முழக்கமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் சண்முகசுந்தரம், விசுவநாதன், ரமேஷ், சிவகுமார் உள்ளிட்டோரிடம் கரூர் டிஎஸ்பி தேவராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமாதானம் ஏற்படாததையடுத்து, 94 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விளைநிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதைத் தடுக்க வேண்டும். உரிய இழப்பீட்டை சட்டப்படியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago