பருவதமலையில் பக்தர்கள் கிரிவலம் :

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் பருவதமலையில் மல்லிகார்ஜுனர் கோயில் மற்றும் பருவத மலை அடிவாரத்தில் கரைகண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில்களில் ‘மார்கழி மாத பிறப்பு நாளன்று சிறப்பு வழிபாடு’ நடைபெறும். அதில், பருவதமலையில் இருந்து உற்சவர் கீழே வந்து கிரிவலம் செல்வது வழக்கம். இவ்விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, பருவதமலையை கிரிவலம் செல்வார்கள். மேலும், பருவதமலை மீது ஏறி சென்று சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

இந்நிலையில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்கழி மாத பிறப்பு சிறப்பு வழிபாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் கட்டுபாடுகளை விதித்துள்ளன. அதில், பருவதமலை மீது ஏறி சென்று பக்தர்கள் தரிசனம் செய்யவும், பருவதமலையை சுவாமி கிரிவலம் செல்லவும் தடை விதித்தது. அதற்கு மாற்றாக கரைகண்டீஸ்வரர் கோயில் உள்ளே சுவாமியின் உற்சவத்தை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அண்ணாமலையை பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டதால், பருவதமலையை கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது. இப்படியான கட்டுப்பாடுகளுடன் மார்கழி மாத பிறப்பின் சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. கரைகண்டீஸ்வரர் கோயில் மற்றும் மல்லிகார்ஜுனர் திருக்கோயில்களில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், கரைகண்டீஸ்வரர் கோயில் உள் பிரகாரத்தில் உற்சவரான மல்லிகார்ஜுனர் சுவாமி உலா நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமிகள் அருளபாலித்தனர். பருவதமலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கரைகண்டீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பேரில் பக்தர்கள் வழிபட்டனர். மேலும், பருவத மலையை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்