பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை ஈடு செய்யும் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் கற்பிக்க கோவையில் இதுவரை 6,471 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இதனை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேசியதாவது:
கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்புகளை ஈடு செய்ய தினமும் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது தன்னார்வலர்கள் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும். தன்னார்வலர்களை இத்திட்டத்தில் அதிகம் இணைப்பதற்கும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவையில் ஒன்பது கலைக் குழுக்கள் உள்ளன. அவர்கள் 15 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள், குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை இதுவரை இணைத்துள்ளனர்.
மேலும், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை தன்னார்வலர்களாக சேர்க்க கல்லூரிகளுக்கு சென்றும் ஊக்கப்படுத்தி வருகின்றனர். தற்போதுவரை 500 கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் 2,089 குடியிருப்புகளில் 1,64,000 மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். மாவட்டத்துக்கு 8,200 தன்னார்வலர்கள் தேவை உள்ள நிலையில் தற்போதுவரை 6,471 தன்னார்வலர்கள் பதிவு செய்து உள்ளனர். திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்திட மாவட்ட அளவிலான குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி அளவில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இல்லம் தேடி கல்வி செல்போன் செயலி மூலம் தன்னார்வலர்கள் விவரங்களை சரிபார்க்கும் பணியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர் இணைந்து தன்னார்வலர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அவர்களது விவரங்களை சரிபார்த்து, தேர்ந்தெடுப்பார்கள். ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், சிஎஸ்ஓ உறுப்பினர்கள் இணைந்து இல்லம் தேடி கல்வி திட்ட செயல்பாடுகள் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என்.கீதா, பேரூர் மாவட்ட கல்வி அலுவலர் ஏ.எம்.பழனிச்சாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க கல்வி ஒருங்கிணைப்பாளர் கே.லெனின்பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago