மருந்துகூட எடுக்கவிடாமல் வீட்டுக்கு ‘சீல்’ வைத்த பைனான்ஸ் நிறுவனம் : மூதாட்டியிடம் சாவியை ஒப்படைக்க மக்கள் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

கோவையைச் சேர்ந்த ஆர்.மாணிக்கம் என்ற மூதாட்டி, அவரது மகள் உஷா (56) ஆகியோர் கோவை நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை சேரன்மாநகர், பாலாஜி கார்டன் பேஸ்-2 பகுதியில் பங்காருசாமி என்பவரின் வீட்டில் குத்தகை தொகை (போக்கியம்) ரூ.12 லட்சம் அளித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். இந்த வீட்டுக்கு ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளதை வீட்டு உரிமையாளர் எங்களிடம் தெரிவிக்கவில்லை. வங்கி அதிகாரிகள் எங்களை வெளியேற்றிவிட்டு கடந்த 3-ம் தேதி வீட்டுக்கு ‘சீல்’ வைத்துவிட்டனர். எனக்கு வயதாகிவிட்டது. எனது மகள் நோயாளி. எங்கள் உடமைகள் வீட்டின் உள்ளே உள்ளன. வீட்டு உரிமையாளரை தொடர்புகொண்டபோது அந்த எண் தொடர்பில் இல்லை என்று தெரிந்தது. எங்களுக்கு அந்த குத்தகை தொகைதான் வாழ்வாதாரம். எனவே, ஹவுசிங் அதிகாரிகளையும், வீட்டு உரிமையாளரையும் விசாரித்து வீட்டுக்காக நாங்கள் அளித்த ரூ.12 லட்சமும், எங்கள் பொருட்கள், உடமைகளும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தொகை கிடைக்கும்வரை அந்த வீட்டிலேயே நாங்கள் வசிக்க அனுமதிக்க வேண்டும். தொகை கிடைத்த 2 நாட்களுக்குள் வீட்டை காலி செய்துகொடுக்க உறுதியளிக்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான உமாராணி நேற்று பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் 85 வயதுடைய மூதாட்டி. தனது விதவை மகளுடன் கஷ்ட ஜீவனம் நடத்திவருகிறார். போதிய அவகாசம் அளிக்காமல், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, மருந்து, மாத்திரைகளைகூட எடுக்க விடாமல் வெளியேற்றி, உடை, உடமைகள் அனைத்தும் உள்ளே இருக்கும்போது வீட்டுக்கு ‘சீல்’ வைத்தது மனிதாபிமானமற்ற செயல். எனவே, இடைக்காலமாக ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் மனுதாரரிடம் உடனடியாக வீட்டு சாவியை ஒப்படைக்க வேண்டும். வரும் 20-ம் தேதி எதிர்மனுதாரர்கள் பங்காருசாமி மற்றும் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தினர் உட்பட அனைவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்