தாம்பரம் - முடிச்சூர் சாலையை இணைக்கும் சுரங்கப்பாதை, சர்வீஸ் சாலை அமைக்க - திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் தொடக்கம் :

தாம்பரம் கிழக்கு, மேற்கு மற்றும் முடிச்சூர் சாலையை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை மற்றும் சர்வீஸ் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தாம்பரம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலையை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை மற்றும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலையை இணைக்கும் விதமாக பாதசாரிகளுக்கான சுரங்கப்பாதை மற்றும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி, சண்முகம் சாலையை ஜிஎஸ்டி சாலையுடன் இணைப்பதற்காகவும், கிழக்கு தாம்பரம் மற்றும் தாம்பரம் முடிச்சூர் சாலையை இணைப்பதற்காக ஜிஎஸ்டி சாலையில் சுரங்கப்பாதை அமைப்பதற்காகவும், சர்வீஸ் சாலை அமைக்கவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. இதற்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் இதுதொடர்பாக கேட்டபோது, ‘‘அரசாணையைத் தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை விரைவில் தொடங்கவுள்ளோம். நிலம் கையகப்படுத்துவது, திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விபரங்கள் இதில் இடம்பெறும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE