தமிழ்நாடு சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.3 கோடி மதிப்பில், 20 தேநீர், சிற்றுண்டி வாகனங்களை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவு இணையமான இண்ட்கோசர்வ் நிறுவனத்தால் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு, அவர்களது வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவை திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இயக்கப்பட உள்ளன. இண்ட்கோசர்வின் தேயிலை தயாரிப்புகளை சில்லறை வர்த்தகத்தில் கொண்டுசெல்ல இவை உதவும். பல வகையான தேநீர், காபி மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படும்.
தேசிய கூட்டறவு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆலோசனை சேவை நிறுவனத்தின் மூலம், கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிவாழ் பழங்குடியினரின் நலனுக்காக செயல்பட்டு வரும் கீ-ஸ்டோன் ஃபவுண்டேஷன் நிறுவனத்துக்கு, ரூ.19.98 லட்சம் நிதியுதவிக்கான அனுமதிக் கடிதத்தை, நிறுவன இயக்குநர் பிரிதம் ராயிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதன் மூலம், இயற்கை முறையில் தேயிலை சாகுபடி செய்தல், தேயிலைச் செடிகளை கவாத்து செய்தல், அமிலத்தன்மையைக் குறைத்தல், ரசாயன இடுபொருட்களைத் தவிர்த்தல் போன்றவை தொடர்பாக, முதல்கட்டமாக 640 சிறு தேயிலை விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
கட்டிடம் திறப்பு
மேலும், வீட்டுவசதித் துறையின் கீழ் இயங்கும், நகர ஊரமைப்புத் துறை சார்பில் மதுரை கூடல்புதூரில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டுள்ள, மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகக் கட்டிடத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், முத்துசாமி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வீட்டு வசதித் துறை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைச் செயலர் வி.அருண்ராய், இண்ட்கோ சர்வ் முதன்மை செயல் அலுவலர் சுப்ரியா சாஹு, தொழில் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், நகர ஊரமைப்பு இயக்குநர் எ.சரவணவேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை முறையில் தேயிலை சாகுபடி செய்தல், செடிகளை கவாத்து செய்தல், ரசாயன இடுபொருட்களைத் தவிர்த்தல் போன்றவை தொடர்பாக 640 சிறு தேயிலை விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago