திருவள்ளூர் அருகே ஜமீன்கொரட்டூரில் விடுதியில் தங்கியுள்ள தனியார் செல்போன் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே ஜமீன்கொரட்டூரில் தனியார் கப்பல் பொறியியல் கல்லூரி வளாகம் உள்ளது. தற்போது செயல்படாமல் உள்ள இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள 7 தளங்கள் கொண்ட மாணவர் விடுதியை, காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலை வாடகைக்கு எடுத்துள்ளது. அந்த விடுதியில், செல்போன் தொழிற்சாலையில் பணிபுரியும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விடுதியில் அனைவரும் உணவு அருந்திய நிலையில், 3 பேருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்களை சக ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, நேற்று மாலை வரை 100-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் பூந்தமல்லி பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் வெள்ளவேடு போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் ஊழியர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இருப்பினும் தொடர்ந்து விடுதி வளாகத்தில் பொது சுகாதார துறை அதிகாரிகள், ஊழியர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago