தலைவாசல் அருகே கோயில் விவகாரம் அதிகாரிகள் தலையீட்டால் தீர்வு :

By செய்திப்பிரிவு

தலைவாசல் அருகே கோயிலில் ஒரு பிரிவினர் வழிபாடு நடத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதிகாரிகள் தலையீட்டால் தீர்வு காணப்பட்டது.

தலைவாசல் அடுத்த வகுமரை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரதராஜ பெருமாள் மற்றும் காமதீஸ்வரர் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் ஒரு பிரிவு மக்கள் வழிபடுவதற்கும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடத்திட மற்றொரு பிரிவு மக்கள் அனுமதி மறுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பான புகாரை அடுத்து வருவாய் துறை சார்பில் கடந்த 3 மாதமாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், ஒரு பிரிவினர் கோயிலை பூட்டி கோயில் நிர்வாகத்தை தாங்களே பராமரித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

இப்பிரச்சினை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பரிந்துரைப்படி, நேற்று ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா கோயிலை திறக்க உத்தரவிட்டார். மேலும், கோயிலில் அனைவரும் சென்று வழிபடவும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடத்தவும் அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு மற்றொரு பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலை திறக்க சென்றனர். அப்போது, ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், 5 பேர் தீக்குளிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் போலீஸார் அவர்களை தடுத்து அப்புறப்படுத்தினர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற எஸ்பி  அபிநவ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் முடிவை ஏற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் சரண்யா தெரிவித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்