நெற்பயிருக்கு துத்தநாக உரமிடுவதன் மூலம் விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற முடியும் என நம்பியூர் வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி, நம்பியூர் வட்டாரத்தில் கீழ்பவானி மற்றும் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
நெல்லில் அதிக மகசூல் எடுப்பது குறித்து நம்பியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி கூறியதாவது:
நெற் பயிரில் பச்சையம் உருவாவதில் தொடங்கி, பல்வேறு உயிர்வேதி விளைவுகளுக்கு துத்தநாகம் உதவிபுரிகிறது. அதிக கார அமில மண்ணில், தொடர்ந்து வயலில் நீர் தேக்கி வைப்பது, பாசன நீரில் அதிகளவு பை கார்பனேட் இருத்தல் ஆகியவற்றால் துத்தநாகச் சத்தின் குறைபாடு ஏற்படும்.
நெற்பயிரில் துத்தநாகக் குறைபாடு ஏற்பட்டால், இளம் இலைகளின் நடுநரம்பு அடிப்புறத்திலிருந்து வெளுத்துக் காணப்படும்.
மேல்புறம் மற்றும் நடுப்பகுதி இலைகளில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும். பயிர்கள் சீராக வளராமல் திட்டுதிட்டாக வளர்ச்சி குன்றி, கட்டை அடித்து காணப்படும். விளைச்சல் குறையும்.
எனவே, நெல் நடுவதற்கு முன்பு, பரம்பு அடித்ததும் ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக (ஜிங்க்) சல்பேட் நுண்ணூட்டத்தை மணலில் கலந்து, சீராக வயலில் இட வேண்டும்.
நடவு செய்த பின்பு துத்தநாக சத்து குறைபாடு அறிகுறிகள் காணப்பட்டால், 10 லிட்டர் தண்ணீரில் 50 கிராம் ஜிங்க்சல்பேட், 100 கிராம் யூரியா மற்றும் ஒட்டும் பசை கலந்து தெளிக்க வேண்டும்.
இதனை இலைவழி தெளிக்கும்போது, மிக விரைவில் பயிர் கிரகித்துக் கொள்கிறது. நெற் பயிருக்கு துத்தநாக உரமிடுவதன் மூலம் விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago