நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தம் உறையும் தன்மையில்லாத ஹீமோபிலியா நோய்க்கு சிகிச்சை மையம் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு, மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி தலைமை வகித்தார். ஆட்சியர் ஸ்ரேயா சிங், ரத்தம் உறையும் தன்மையில்லாத ஹீமோபிலியா நோய்க்கான சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது:
ஹீமோபிலியா என்பது மனித உடலில் குருதி (ரத்தம்) உறையாமல் போகும் பரம்பரை நோயின் பெயராகும். நாமக்கல் மாவட்டத்தில் 5 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட மொத்தம் 76 பேர் ஹீமோபிலியா நோயாளிகள் உள்ளனர்.
இவர்கள் தொடர் சிகிச்சைக்காக ஒவ்வொரு முறையும் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வந்தனர். தற்போது ஹீமோபிலியா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1.22 கோடி மதிப்புள்ள மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.
ஹீமோபிலியா நோயாளிகளை ஒருங்கிணைக்கவும், அவர்கள் நலன்களை முன்னெடுத்து செல்லவும் ஹீமோபிலியா சொசைட்டி உள்ளது. இச்சிகிச்சை மையம் தொடங்க உள்ளதை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஹீமோபிலியா நோயாளிகள் ஒவ்வொரு முறையும் தொடர் சிகிச்சைக்காக சேலம் செல்ல தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள ரூ.1 கோடியே 22 லட்சத்து 51 ஆயிரத்து 977 மதிப்பிலான மருந்துகளை ஆட்சியர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டார். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் குணசேகரன், துணை கண்காணிப்பாளர் சுரேஷ்கண்ணா, நிலைய மருத்துவ அலுவலர் பி.கண்ணப்பன், சேலம் ஹீமோபிலியா சங்கத் தலைவர் நடராஜ், நாமக்கல் மாவட்ட ஹீமோபிலியா சுய உதவிக்குழு தலைவர் லோகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தம் உறையும் தன்மையில்லாத ஹீமோபிலியா நோய்க்கான சிகிச்சை மையத்தை ஆட்சியர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு சிறுவனுக்கு அளித்த சிகிச்சையை அவர் பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago