பாளையங்கோட்டை சதக்கத் துல்லா அப்பா கல்லூரியில் அதிநவீனமாக கட்டப்பட்டுள்ள ஹாஜி மு.ந.முஹம்மது சாகிப் நூலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நூலக கட்டிடத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி திறந்து வைத்து பேசும்போது, “ நூலகம் என்பது மாணவர்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகத்தை சென்னையில் கருணாநிதி உருவாக்கினார். தற்போது மதுரையில் கலைஞர் நூலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உருவாக்கி வருகிறார்.
நூலகங்களுக்கு மாணவர்கள் வந்து படிக்க வேண்டும். முதலில் நூலகத்தில் ஆசிரியர்கள் படிக்கும் பழக்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.
அவர்களை பின்பற்றி மாணவ, மாணவியர் வருவார்கள். போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர் இந்த நூலகத்தை தக்கமுறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும்” என்று தெரிவித்தார்.
கல்லூரி முதல்வர் மு.முஹம்மது சாதிக் வரவேற்றார். தாளாளர் த.இ. செ. பத்ஹூர் ரப்பானி தொடக்க உரையாற்றினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கா.பிச்சுமணி, பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் மு.அப்துல் வஹாப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் எஸ்.செய்யது அப்துல் ரகுமான், பொருளாளர் ஹெச்.எம். ஷேக் அப்துல்காதர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கல்லூரி துணை முதல்வர் எஸ்.எம்.ஏ.செய்யது முகமது காஜா நன்றி கூறினார். தமிழ்த்துறை தலைவர் ச.மகாதேவன் தொகுத்து வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago