வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள புறநோயாளிகள் பிரிவு நேற்று காலை வழக்கம்போல் செயல்பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து காத்திருந்தனர்.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் உள்ள கண் சிகிச்சை அறையில் உள்ள மின் வயரில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு திடீரென மின் ஒயர்கள் நேற்று காலை தீப்பற்றி எரிய தொடங்கின.
அந்த இடத்திலிருந்து புற நோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் உள்ள பல இடங்களுக்கு இந்த தீ பரவியதால் பயங்கர சத்தத்துடன் மின் வயர்களிலிருந்து புகை எழுந்தது.
இதைக்கண்ட பொதுமக்கள் மற்றும் சிகிச்சைக்காக வந்த புறநோயாளிகள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தனர். உடனே, அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த கட்டிடத்தின் மின்சார இணைப்பை துண்டித்தனர். அரசு மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து அங்கிருந்த தீய ணைப்பு கருவிகளை கொண்டு மின்சார வயரில் பற்றி எரிந்த தீயை கட்டுப்படுத்தினர்.
அப்போது, மின்தடை ஏற்பட்டதால் புற நோயாளிகள் பிரிவில் கணினிகள் இயங்கவில்லை. நோயாளிகளின் விவரம் அங்குள்ள ஒரு நோட்டில் எழுதப்பட்டு சீட்டு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தீயினால் சேதமடைந்த மின்சார வயர்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு மின் வயர்கள் சீரமைக்கப் பட்டு புற நோயாளிகள் பிரிவில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் நேற்று காலை மின் கசிவால் மின்வயர்கள் தீப்பற்றி எரிந்த இந்த சம்பவம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சலசலப்பை ஏற்படுத் தியது. இது தொடர்பாக வேலூர் கிராமிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago