உடுமலை: தாராபுரம் அருகே நல்லதங்காள் அணை கட்டுவதற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்காததால் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாராபுரம் வட்டம் பொன்னிவாடி கிராமத்துக்குட்பட்ட பகுதியில் நல்லதங்காள் அணை கட்டுவதற்காக கடந்த 2000-ம் ஆண்டு விவசாயிகளிடமிருந்து 645.75 ஏக்கரில் நிலம், கிணறு, வீடுகள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக இழப்பீடும் வழங்கப்பட்டது. இந்நிலையில், இழப்பீடு குறைவாக வழங்கியுள்ளதாகவும், கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியும் பாதிக்கப்பட்ட 26 விவசாயிகள் சார்பில் தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2017-ல் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் கூடுதல் இழப்பீடு வழங்காத நிலையில் இவ்வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை நேற்று நடைபெற்றது. விவசாயிகள் சார்பாக முன்னாள் எம்.பி.,யும், வழக்கறிஞருமான எஸ்.கே.கார்வேந்தன் ஆஜரானார். அப்போது, தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி தர்மபிரபு உத்தரவிட்டார். இதையடுத்து உத்தரவு நகலை கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நீதிமன்ற ஊழியர்கள் ஒட்டினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago