உடுமலையில் அரசுப்பள்ளி முன் வேகத்தடை அமைக்க கோரிக்கை :

உடுமலை தளி சாலையில் அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதே பகுதியில் மசூதி, வணிக வளாகம், நூலகம், வருவாய் துறை, நகராட்சி அரசுஅலுவலகங்கள், அரசு விருந்தினர்மாளிகை ஆகியவை அமைந்துள்ளன. இதனால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் பகுதியாக தளி சாலை விளங்குகிறது.

பள்ளி முன்பாக உள்ள பிரதான சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், கேரளமாநிலத்துக்கும், திருமூர்த்தி மலை,அமராவதி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. அதனால் சாலையை கடக்கமுடியாமல் பள்ளி மாணவர்கள் சிரமப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, ‘‘தளி சாலையில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன் வேகத்தடை அமைக்க வேண்டும் எனக்கோரி காவல் துணை கண்காணிப்பாளர் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீஸாருக்கு, அவர் உத்தரவிட்டார். ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதனால் பள்ளியின் முன் அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் நிகழ்கின்றன.

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, அரசுப்பள்ளி முன் வேகத்தடை அமைப்பதோடு, பள்ளி நேரத்தில் போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்