திருப்பூர்: திருப்பூர் செவந்தாம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (42). பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 12-ம் தேதி, வீட்டில் இருந்து காட்டுப்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்துக்கு காரில் சென்றார். அங்கு பணியாளர்களை சந்தித்து விட்டு, யாசின்பாபு நகர் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென காரின் பின் பகுதியில் சத்தம் கேட்டது. உடனே, காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் 3 பேர், முத்துசாமியை அவரது காரிலேயே கடத்தினர்.
வெகுநேரமாகியும் முத்துசாமி வீடு திரும்பாததால், பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடினர். முத்துசாமியிடம் இருந்த ஏடிஎம் கார்டுகள், செல்போன்கள், ‘ஸ்மார்ட் வாட்ச்’ ஆகியவற்றை மர்மநபர்கள் மிரட்டி பறித்துள்ளனர். ஏடிஎம் கார்டின் பாதுகாப்பு எண்ணை மிரட்டி வாங்கி, ரூ.65,000-ஐ மர்மநபர்கள் எடுத்தனர். மதுரையில் துவரிமான் பிரிவு அருகே, முத்துசாமியை இறக்கிவிட்டு காரை கடத்திச் சென்றனர். அங்கிருந்த ஒருவரிடம் அலைபேசியை வாங்கி, வீட்டுக்கு முத்துசாமி தகவல் கொடுத்தார். குடும்பத்தினர், மதுரைக்கு சென்று அவரை திருப்பூருக்கு அழைத்து வந்தனர். முத்துசாமி அளித்த புகாரின் பேரில் நல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago