குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து அறிந்த நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள், ஹெலிகாப்டரில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த செயலுக்காக, விமானப்படை, ராணுவம், போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இக்கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ரூ.2.5 கோடி ஒதுக்கீடு
இந்நிலையில் நஞ்சப்ப சத்திரத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக குன்னூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுனிதா தெரிவித்தார்.நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர், அப்பகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்தார். அதன்பின்பு ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுனிதா கூறும்போது, ‘‘நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராம மக்களின் கோரிக்கையின்படி தடுப்புச் சுவர், தண்ணீர் வசதி, நடைபாதை வசதிகள் செய்து தரப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் நினைவுச் சின்னம் அமைக்கவும், காட்டேரி பூங்காவை உயிரிழந்த முப்படைகளின் தளபதி பெயரில் பெயர் மாற்றவும் தமிழக அரசுக்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.
போலீஸார் விசாரணை
ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக 6-ம் நாளாக நேற்றுபோலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதி முழுவதும்ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதால், கிராம மக்களைத்தவிர, வேறு நபர்களை ஊருக்குள்ராணுவத்தினர் அனுமதிப்பதில்லை. நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விபத்து பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago