பேச்சுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசுகளை ஆட்சியர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க உறுப்பினர்கள் 17 பேருக்கு காய்கறி வியாபாரம் செய்ய தலா ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நான்கு சக்கர தள்ளு வண்டிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் காந்தியடிகள் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆகியோர் பிறந்த நாளையொட்டி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 16 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் மற்றும் தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.48 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பவானி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்