சிறுமி பாலியல் கொலை வழக்கில் - மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஜி.குரும்பபட்டி கிராமத்தைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி ஒருவரது 12 வயது மகள் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்து, உடலில் மின்சாரம் செலுத்தி கொலை செய்யப்பட்டார்.

வடமதுரை போலீஸார் அதே ஊரைச் சேர்ந்த கிருபானந்தன் என்ற இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்தனர். திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில், போலீஸார் சமர்ப்பித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனக் கூறி கிருபானந்தனை உயர் நீதிமன்றக் கிளை விடுதலை செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி மறுவிசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதற்கு மாவட்டச் செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் நடேசன், மாநிலப் பொதுச்செயலாளர் கம்பம் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE