சாட்டை துரைமுருகனின் அவதூறு பேச்சை - எழுத்து வடிவில் தாக்கல் செய்யாத போலீஸார் : உயர் நீதிமன்றம் அதிருப்தி

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் குறித்து சாட்டை துரைமுருகனின் அவதூறு பேச்சை போலீஸார் எழுத்து வடிவில் தாக்கல் செய்யாததற்கு உயர் நீதி மன்றம் அதிருப்தி தெரிவித்தது.

தஞ்சாவூரைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன். நாம் தமிழர் கட்சி நிர்வாகியான இவர் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் உயர் நீதிமன்ற கிளை அவருக்கு ஜாமீன் வழங்கியது. அப்போது இனிமேல் இதுபோன்று அவதூறு பரப்ப மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதியளித்து கடிதம் கொடுத்தார். அதன் அடிப்படையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கன்னியா குமரியில் நடந்த நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து தஞ்சாவூர் வழக்கில் அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் போலீ ஸார் மனு தாக்கல் செய்தனர்.

அதில், நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறி சாட்டை துரைமுருகன் முதல்வரை அவதூறாக பேசியுள்ளார். இது தொடர்பாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சாட்டை துரைமுருகனின் பேச்சை எழுத்து வடிவில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டபடி, சாட்டை துரைமுருகனின் பேச்சை போலீஸார் எழுத்து வடிவில் தாக்கல் செய்யவில்லை. இதனால் நீதிபதி அதிருப்தி அடைந்தார்.

நீதிமன்றம் உத்தரவிட்டு போதிய அவகாசம் வழங்கியும் சாட்டை துரைமுருகனின் பேச்சை போலீஸார் எழுத்து வடிவில் தாக்கல் செய்யவில்லை. ஒரு மாநில முதல்வர் தொடர்பான வழக்குக்கே இந்த நிலை என்றால் மக்கள் தொடர்பான வழக்குகள் எவ்வாறு கையாளப்படும்.

அடுத்த விசாரணையின்போது சாட்டை துரைமுருகனின் பேச்சை எழுத்து வடிவில் தாக்கல் செய்யாவிட்டால் போலீஸாரின் மனு தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறி, விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்