கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பொங்கல் பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண் பாண்ட தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பெரும்பாலும் பொங்கல், தீபாவளி, கார்த்திகை தீபம், நவராத்திரி விழாக்களுக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கும் பணிகளும், மண் அடுப்பு, மாநாற்றுகளுக்கு தேவையான சிறுதொட்டிகள் செய்து விற்பனை செய்கின்றனர்.
போதிய வருவாய் இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலை கைவிட்டு மாற்றுத்தொழிலுக்கு பலர் சென்றுவிட்டனர். ஒருசில குடும்பத்தினர் மட்டும் குலத்தொழிலை கைவிட மனம் இல்லாமல் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே மண்பாண்ட தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நிகழாண்டில் தொடர்ந்து பெய்த மழையாலும், பனியின் தாக்கம் உள்ளதாலும் பொங்கல் பானை தயாரிக்கும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக, வேலம்பட்டி அருகே உள்ள சென்றாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி கூறும்போது, பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பே பானை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்வோம். ஆனால், இந்தாண்டு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மழை பெய்ததாலும், வெயிலின் தாக்கம் குறைந்ததாலும் பானை தயாரிக்கும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளதால் களிமண் கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு வாங்கிக் குவித்து வைக்கப்பட்டிருந்த களிமண்மூலம் தற்போது பானைகள் செய்து வருகிறோம். மேலும் தயாரிக்கப் பட்டுள்ள சிறியது முதல் பெரிய அளவிலான மண் பானைகள், அடுப்புகள் உலர வைக்கவும், சூளையில் வைத்து சுட முடியாமல் அடுக்கி வைத்துள்ளோம்.
இதனால், பொங்கல் விழாவுக்கு தேவையான அளவு பானைகள் தயாரிக்க முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் பானைகள் விலை கடந்த ஆண்டை விட அதிகரிக்கும். இருப்பினும் மூலபொருட்களான மண், ஆட்கள் கூலி, விறகு உள்ளிட்டவை உயர்வால் போதிய வருவாய் கிடைப்பதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago