திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் - மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் : 900-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு

By செய்திப்பிரிவு

தி.மலை, வேலூர் மாவட்டங்களில் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 900-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வழங்குவது போல் குறைந்தபட்சம் உதவித் தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் மற்றும் கடும் மாற்றுத் திறனாளிக்கான உதவித் தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தி.மலை மாவட்டத் தில் சாலை மறியல் நடைபெற்றது.

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டப் பொருளாளர் சத்யா தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் மாநில துணைத் தலைவர் சண் முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல் செங்கம், போளூர், ஆரணி, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, வெம்பாக்கம் என மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. அப்போது அவர்கள், உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதை யடுத்து, 7 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 899 மாற்றுத் திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து, பின்னர் விடு வித்தனர்.

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கு, மாவட்டப் பொருளாளர் வீர பாண்டியன் தலைமை தாங்கினார். இதனால், குடியாத்தம்-காட்பாடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில், பங்கேற்றவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தகவலின்பேரில், காட்பாடி காவல் துறையினர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அவர்கள் மறியலை கைவிட மறுத்ததால் 30-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து போக்கு வரத்தை சரி செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்