கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர் கடனை புதுப்பிக்கும்போது கடன் தொகையை முழுமையாக செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது என விடிவெள்ளி விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் தலைவர் கோ.நெடுவேல், செயலாளர் த.விஜயகீர்த்தி, பொருளாளர் திருவேங்கடம் உள்ளிட்டோர் நேற்று மனு அளித் துள்ளனர்.
பின்னர் அவர்கள் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன் தொகையை ஆண்டுக்கு இரண்டு முறை என 6 மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் விதிமுறை அமலில் உள்ளது. அப்போது, கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் தொகை நிலுவையில் இருந்தாலும், உடனடியாக செலுத்த வேண்டும் என கடந்த காலங்களில் கட்டாயப்படுத்தியது கிடையாது.
ஆனால் தற்போது, பயிர் கடன் தொகையை புதுப்பிக்க செல்லும் போது, கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற கடன் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும்என அதிகாரிகள் கட்டாயப்படுத்து கின்றனர். கரோனா தொற்றால்,விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த சில மாதங்களாக பெய்து வரும் கன மழைக்கு பயிர்கள் சேதமடைந்துள்ளன. கால்நடைகளும் பாதித்துள்ளன. இந்த சூழ்நிலையில், கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற கடன் தொகையை முழுமையாக திருப்பி செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவது என்பது விவசாயிகளுக்கு மன உளைச் சலை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகளை தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கடன் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தாமல், கடந்த கால ஆட்சிகளில் பின்பற்றியது போல் சிட்டா மற்றும் அடங்கல் மட்டும் பெற்று கடன் தொகையை புதுப்பித்து விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும். வரும் காலங்களில் மகசூல் கிடைக்கும் போது, கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற கடன் தொகையை முழுமையாக செலுத்திவிடுவோம்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago