கண்ணமங்கலத்தில் - இந்தியா-பாகிஸ்தான் யுத்த வெற்றி பொன்விழா : ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

இந்தியா–பாகிஸ்தான் யுத்த வெற்றியின் பொன் விழா நாள் முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் தி.மலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு சங்கத் தலைவர் கேப்டன் லோகநாதன் தலைமை வகித்தார். பொருளாளர் கருணா, துணைத் தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரவி வரவேற்றார். அணிவகுப்பு பேரணியை வேலூர் 10-வது பட்டாலியன் என்சிசி அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் கே.சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாகநதி ஆற்றங்கரை பாலத்தில் இருந்து அணி வகுப்பு பேரணி புறப்பட்டது. முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்ற பேரணி, விழா நடை பெற்ற திருமண அரங்கில் நிறைவு பெற்றது.

பின்னர், அங்கு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் யுத்த வெற்றியின் பொன்விழா ஆண்டு கூட்டத்தில் ராணுவ உயர் அதிகாரிகளான பிரிகேடியர் டி.சிவா, கர்னல் சஞ்சய் காக்ரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது அவர்கள், “1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் யுத்தத்தில் ஒரே நாளில் 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்களை இந்தியா சரணடைய செய்தது வெற்றியாகும். அந்த யுத்தத்தில் பங்கேற்ற வீரர்கள் பலரும், நம்முடன் உள்ளனர். வீரமரணமடைந்த வீரர்களுக்கு நாட்டு மக்கள் தலை வணங்கினர்” என்றனர்.

இதையடுத்து யுத்தத்தில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் அவர் களது மனைவிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தலைமை தளபதிக்கு அஞ்சலி

முன்னதாக, குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், பணியில் உள்ள வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்