சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பயணி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
‘ஒமைக்ரான்’ என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கோவை விமானநிலையத்தில் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.
இதற்காக சிறப்பு பரிசோதனை குழுவினர் பணியில் ஈடுபட்டுள் ளனர்.
அதிக ‘ரிஸ்க்’ உள்ள நாடுகள் என கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமானநிலையத்தில் கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து கோவை வந்தவர்களுக்கு நேற்றுமுன்தினம் பரிசோதனை மேற்கொண்டதில், ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர் பாக சுகாதாரத்துறையினர் கூறும் போது, “ஒமைக்ரான் பாதிப்பை கண்டறிய உதவும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் ‘டேக்பாத் கிட்’ பயன்படுத்தி பரிசோதனை செய்கிறோம். இந்த கிட்டில் எஸ், என், ஓஆர்எஃப்1 என மூன்று ஜீன்களை கண்டறியலாம். பரிசோதனையின்போது ‘எஸ்’ ஜீன் மட்டும் தெரியாமல் இருந்தால், உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என கருத வேண்டும். அந்த மாதிரியை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
தொற்று உறுதியானவரின் மாதிரியில் ‘எஸ்’ ஜீன் தெரிந்தது. எனவே, ஒமைக்ரான் பாதிப்பு இருக்க வாய்ப்புகள் குறைவு என கருதுகிறோம். குடும்பமாக வந்த 3 பேரில், ஆண் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. சிங்கப்பூரில் இருந்து அவர் வந்துள்ளதால், மேற்கொண்டு மரபணு பரிசோதனைக்காக அவரது மாதிரியை சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் தொற்று உறுதிசெய்யப்பட்டு, மரபணு பரிசோதனைக்காக மாதிரியை கோவையில் இருந்து சென்னைக்கு அனுப்புவது இதுவே முதல்முறை” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago