கரோனா சிறப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர் நலச்சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில் 300 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் உள்ளனர். கரோனா காலக்கட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களுடன் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என கண்டறியும் பணியில் ஈடுபட்டோம். மேலும், கிருமி நாசினி தெளிப்பது, ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு அளவு, வெப்பத்தின் அளவு ஆகியவற்றை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டோம்.
கரோனா நோயாளிக்குத் தேவையான சிகிச்சை மட்டுமின்றி அவர்கள் இறக்க நேரிட்டால் அவர்களை அடக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டோம். மேலும், மாவட்ட எல்லையில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பது, நோயாளிகளை 108 வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டோம்.
எனினும், முதல்வர் அறிவித்த ஏப்ரல், மே, ஜூன் என மூன்று மாதத்திற்கான கரோனா சிறப்பு உதவித்தொகை நாமக்கல் மாவட்டத்தில் வழங்கப்படவில்லை.
மாதம் தலா ரூ.5 ஆயிரம் வீதம் சிறப்பு உதவித்தொகை அறிவிக்கப்பட்டது. பிற மாவட்டங் களில் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுவிட்டது.
அதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் உதவித் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago