நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 800 அரங்குகளுடன் - ஜன.6-ல் 45-வது சென்னை புத்தகக் காட்சி : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து விருதுகளை வழங்குகிறார்

By செய்திப்பிரிவு

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் 45-வது புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் ஜன.6-ம் தேதி தொடங்கி வைத்து, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி விருதுகளையும் வழங்குவார் என்று பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) புதிய தலைவர் எஸ்.வயிரவன், புதிய செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பபாசி சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 45-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.6 முதல் 23-ம் தேதி வரை 18 நாட்கள் நடைபெறுகிறது.

புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, 2022-ம் ஆண்டுக்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி விருதுகளையும் வழங்குகிறார். விழாவில், சிறந்த பதிப்பாளர்களையும் அவர் சிறப்பிக்க உள்ளார். முதல்வர் வருகை தந்து கண்காட்சியை தொடங்கி வைப்பது வரப்பிரசாதம் ஆகும். தொடக்க விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பபாசி புரவலர் நல்லி குப்புசாமி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இது, ஆசியாவிலேயே கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நடைபெறும் மிகப்பெரிய புத்தகக் காட்சி ஆகும். இக்கண்காட்சியில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படும். பார்வையாளர்களுக்கு முகக் கவசம், சானிடைசர் வழங்கப்படும்.

கிருமிநாசினி கொண்டு கண்காட்சி வளாகம் அடிக்கடி சுத்தம் செய்யப்படும். கண்காட்சி அரங்கில் கரோனா தடுப்பூசி முகாம், மினி கிளினிக் ஆகியவையும் செயல்படும்.

இக்கண்காட்சியில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. கடந்த ஆண்டுபோலவே, இந்த ஆண்டும் அரங்கு அனுமதி கட்டணம் குறைக்கப்படுகிறது.

வேலை நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கண்காட்சியை பார்வையிடலாம். நுழைவுக் கட்டணம் ரூ.10. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். கண்காட்சி வளாகத்தில் பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றன. புத்தகக் காட்சியை சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு வழங்கி, தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பபாசி துணைத் தலைவர் பி.மயிலவேலன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்