சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆவடியில் ராணுவ பீரங்கிகள், தளவாடங்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ‘ஆஸாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்தை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.
இதை முன்னிட்டு, சென்னை ஆவடியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ஆர்மர்டு வெஹிகிள் நிகம் லிமிடெட் (ஏவிஎன்எல்), படைக்கல ஆடை தொழிற்சாலைகள் (ஓசிஎஃப்) சார்பில், ராணுவ தளவாட கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது.
ஏவிஎன்எல் தொழிற்சாலையின் தலைமை மேலாண்மை இயக்குநர் சஞ்சீவ் கிஷோர், ஓசிஎஃப் தொழிற்சாலையின் பொது மேலாளர் சுர்ஜித் தாஸ் ஆகியோர் இக்கண்காட்சிகளை தொடங்கி வைத்தனர்.
வரும் 19-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் அஜெயா டி-72, பீஷ்மா டி-90, அருண் எம்கேஐ மற்றும் பிஎல்டி டி-72 ரக மற்றும் கியர் பாக்ஸ் இன்ஜின்கள், டிராக் வீல்கள் போன்ற பீரங்கிகளின் பல்வேறு பாகங்களும் இடம்பெறும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ராணுவ தொழில்நுட்பம், ஆயுதங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அவர்களை ராணுவத்தில் சேர ஊக்கப்படுத்துவதும் இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.
அஜய் அரங்கில் தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை பொதுமக்களும் பார்வையிடலாம் என்று பாதுகாப்பு துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago