சென்னையில் மக்கள் தொகை பெருக்கம், வாகன பெருக்கம் காரணமாக நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
வடசென்னை பகுதியில், மத்திய சென்னை, தென் சென்னை போன்று அகலமான சாலைகள் இல்லாததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலம் வந்தாலே, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப் பாலம் வெள்ள நீரால் நிரம்பி, போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இந்தத் தடை சுமார் ஒரு வார காலத்துக்கு நீடிக்கிறது.
இப்பிரச்சினையால் அப்பகுதி மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த சுரங்கப் பாலம் குறுகியதாக இருப்பதாலும், வாகனங்கள் வந்து செல்வதில் சிரமங்கள் இருப்பதாலும், காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இங்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், ஓட்டேரி பகுதியில் கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் ஸ்ட்ராஹன்ஸ் சாலை உள்ளிட்ட 4 சாலைகள் சந்திக்கும் பகுதியிலும், வணிக நிறுவனங்கள் நிறைந்த தியாகராய நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தெற்கு உஸ்மான் சாலை - சிஐடி நகர் 1-வது பிரதான சாலை இடையேயும் மேம்பாலங்களை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:
மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய மேம்பாலங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் ரூ.142 கோடியில் 680 மீட்டர் நீளம், 15.20 மீட்டர் அகலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரயில்வே அனுமதியும் கோர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதேபோன்று ஓட்டேரி பகுதியில் கொன்னூர் நெடுஞ்சாலை - ஸ்ட்ராஹன்ஸ் சாலை இடையே ரூ.62 கோடியில் 508 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் பிரிக்கின்ஸ் சாலை - குக்ஸ் சாலை இடையே இடையூறு இன்றி போக்குவரத்து செல்ல முடியும். இதேபோன்று தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை - சிஐடி நகர், முதல் பிரதான சாலை இடையே 1,200 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டங்கள் தொடர்பாக அரசு கேட்டிருந்தபடி விரிவான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு அரசு ரூ.335 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகளை தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் கோரப்பட உள்ளன. இத்திட்டங்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago