புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட - புதிய எம்எல்ஏக்களுக்கு டெல்லியில் 3 நாட்கள் பயிற்சி :

By செய்திப்பிரிவு

புதிதாக தேர்வு செய்யப்பட்ட புதுவை எம்எல்ஏக் களுக்கு டெல்லியில் இன்று முதல் 3 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக அவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.

புதுவை சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 14 புதிய எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை செயல்பாடு, சட்ட வழிமுறைகளை அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி புதுவையின் புதிய எம்எல்ஏக்களுக்கு இன்று முதல் 3 நாட்கள் பயிற்சியளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்க பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் அமைச்சர் சாய் சரவணன்குமார், எம்எல்ஏக்கள் ஏகேடி. ஆறுமுகம், கேஎஸ்பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், சம்பத், நாகதியாகராஜன், செந்தில்குமார், விவியன்ரிச்சர்ட், அசோக்பாபு, ராமலிங்கம், பிரகாஷ்குமார், சிவசங்கர் ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு 3 நாள் பயிற்சி முடித்து டெல்லியில் முக்கிய இடங்களை பார்வையிட்ட பின் புதுவைக்கு திரும்புகின்றனர்.

முதல்வர் டெல்லிக்கு செல்வாரா?

இதனிடையே முதல்வர் ரங்கசாமி, பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்க டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அங்கு 2 நாட்கள் தங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால் பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோயிலை திறந்து வைத்து இரவு கங்கா ஆரத்தியில் பங்கேற்று தங்குகிறார். இதனால் ரங்கசாமியின் பயண திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலக தரப்பில் குறிப்பிடுகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டபோது, “டெல்லி போகும்போது சொல்கிறேன்” என்று குறிப்பிட்டார். பாஜக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இதுவரை டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3 நாள் பயிற்சி முடித்து டெல்லியில் முக்கிய இடங்களை பார்வையிட்ட பின் புதுவைக்கு திரும்புகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்