புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் 100 அடி உயர தேசியக்கொடி கம்பம், தியாக சுவருக்கு முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் தேசியக்கொடியுடன் 100 அடி உயர கொடிக்கம்பமும், தியாக சுவரும் 75 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. புதுச்சேரியில் கடற்கரை சாலை காந்தி திடல் வளாகத்தில் கொடிக்கம்பம், தியாக சுவர் ஆகியவை தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. விழாவுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், “100 அடியில்கொடிக்கம்பத்துடன், தியாக சுவர் அமைக்கப்பட உள்ளது.
தியாக சுவர் 40 அடி நீளமும், 12 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்படும். சுவற்றின் துாண்களில் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அதன்அருகில் கியூ ஆர் கோடு இருக்கும்.
அதை ஸ்கேன் செய்தால் போராட்ட வீரரர்களின் தியாகங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்னதாக அமைக்கப்பட உள்ளது. இதை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். 50-வது சுதந்திர தினத்துக்கு 'தாய் மண்ணே வணக்கம்' என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியதுபோல, 75-வது சுதந்திர தினத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த 12 மொழிகளில் பிரபல பாடகர்கள், நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கும் வீடியோ ஆல்பமும் தயாரிக்கப்பட்டு வருகிறது. 6 கி.மீ நீளத்துக்கு சுதந்திர போராட்ட நிகழ்வுகளை மையமாக வைத்து உலகின் மிக நீளமான ஓவியமும் வரையப்பட உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago