கடலூர் மாவட்டத்தில் இழு வலை மற்றும் சுருக்கு வலை பயன்படுத்தும் மீனவர்கள் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
சுருக்கு வலையை மாவட்ட நிர்வாகம் தடை செய்தது. இதன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சுருக்கு வலை பயன்படுத்தும் மீனவர்கள் சிறிய படகுகள் மூலம் மீன் பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இழுவலை பயன்படுத்தும் மீனவர்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுவதால் தங்களது மீன் பிடித் தொழில் பாதிக்கப்படுவதாக மீனவர்களில் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினர்.
இழு வலை பயன்படுத்தும் மீனவர்களின் வலைகள் கண் அளவு 40 மில்லி மீட்டருக்கு குறைவாக இருக்கக் கூடாது, 240 குதிரை திறனுக்கு குறைவான இன்ஜின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. ஆனாலும் அந்த விதிமுறைகளை மீறி மீன் பிடிப்பதால், தங்களது தொழில் பாதிக்கப்படுவதாக கூறி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, எம்ஜிஆர் திட்டு, ராசக்கும்ப்பம் உள்ளிட்ட 10 மீனவ கிராம மீனவர்கள் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கருப்புக் கொடி கட்டி, கடலூர் மீன் வளத்துறை அலுவலகம் அருகில் படகுகளில் இருந்தவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இழுவலை காரணமாக தாங்கள் தொழில் செய்ய முடியாததால் தங்களது படகு, வலை மற்றும் படகுகளின் உரிமம் ஆகியவற்றை ஒப்படைக்கப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை அழைத்து கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீனவர்கள் தங்களது படகு உரிமத்தை ஒப்படைக்க முயன்றனர். விதிமுறைகளை மீறி செயல்படும் இழுவலைகள் பறிமுதல் செய்யப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து, மீனவர்கள் போராட் டத்தை கைவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago