பாம்பன் ரயில் பால பணி வரும் மார்ச்சுக்குள் முடிக்கப்படும் : தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் உறுதி

By செய்திப்பிரிவு

பாம்பன் ரயில் பாலப் பணிகள் 2022 மார்ச்சுக்குள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் தெரிவித்தார்.

மதுரை - திருச்சி இரட்டை வழிப் பாதையில் நேற்று `அப்லைனில்’ பொதுமேலாளர் ஜான்தாமஸ் ஆய்வு செய்தார். முன்னதாக மதுரை ரயில் நிலையத்தில் நவீன சிக்னல், முதலாவது நடைமேடையிலுள்ள பயணிகள் வசதி மற்றும் நடைமேம்பாலம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

ரயில் நிலைய புதிய கட்டிட பணித்திட்டங்களை சிறப்பு வீடியோ திரை மூலம் ஆய்வு செய்து அதிகாரி களுக்கு தனது ஆலோசனைகளை வழங்கிய பின்னர் பொதுமேலாளர் ஜான் தாமஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை ரயில் நிலையத்தில் புதிய இரண்டடுக்கு கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. ரயில் நிலையத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்துக்குச் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டப் பணியும் மேற்கொள்ளப்படும்.

கரோனா தொற்றுக்கு முன்பு இயங்கிய பயணிகள் ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்படும். மதுரை ரயில் நிலையத்தை விமான நிலையத்துக்கு இணையாகப் புதுப்பிக்கும் பணிக்காக டிசம்பரில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். இந்தப் பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்படும்.

பாம்பன் ரயில் பாலப் பணி 2021 மார்ச்சுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். மதுரை- நெல்லை இடையே இரு வழிப்பாதை யாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒமைக்ரான் பரவல், பாதிப்புகளைப் பொருத்து பயணிகள் ரயில் இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது ரயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி, முதன்மை ரயில் இயக்க மேலாளர்  குமார், முதன்மை பொறியாளர் பிரபுல்ல வர்மா ஆகியோர் கலந்துகொண்டனர். ரயில் இயக்கம், வர்த்தகம், சிக்னல், மருத்துவமனை மின் மயமாக்கல் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர் களுக்கு சிறந்த பணிக்காக பாராட்டி குழு விருது வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்