ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு கோரி நாமக்கல்லில் காத்திருப்புப் போராட்டம் :

ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக்கோரி நாமக்கல்லில் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சமீபத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், பணிப் பாதுகாப்பு வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஜாக்டோ அமைப்பின் அனைத்து இணைப்பு சங்கங்கள் சார்பில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஆசிரியர்கள் மீது மாணவர்கள் மற்றும் பெற்றோர் அளிக்கும் புகார்களை கல்வித்துறை உயர் அலுவலர்கள் விசாரணை செய்து அதில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக நிறைவேற்றி பள்ளிகளில் ஆசிரியர்கள் அச்சமற்ற சூழ்நிலையில் கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை உதவவேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெறும் எனவும் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE