சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் - வழிகாட்டி பலகை வைக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் நகரங்களுக்கு பிரிந்து செல்லும் சாலைகள் தொடர்பான வழிகாட்டி பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் பட்டர்பிளை மேம்பாலம் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் வடிவத்தை போல இருக்கும். சேலம் கந்தம்பட்டி புறவழிச்சாலையில் இருந்து, சென்னை, கோவை நகரங்களுக்கான செல்லும் சாலை, கோவையில் இருந்து, பெங்களூரு, சென்னை செல்லும் சாலை என 4 வழித்தடங்கள் பட்டர்பிளை மேம்பாலத்தில் பிரிந்து செல்கின்றன.

4 சாலைகளை இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் இருந்தாலும், வாகனங்கள் எந்த இடத்திலும் சாலையில் காத்திருக்கவோ, குறுக்கே கடக்கவோ அவசியமின்றி செல்லும் வகையில், சுழல் வடிவில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

ஆனால், பாலத்தின் மீது செல்ல வேண்டிய நகரங்களுக்கு பிரிந்து செல்வதற்கான வழிகாட்டி பலகை, சின்னஞ்சிறியதாக கண்ணுக்கு எளிதில் தெரியாத வகையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறியபடி வாகனங்களை இயக்கி வரும் நிலையுள்ளது.

இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:

பொதுவாக சாலைகளிலும், பாலங்களிலும், 100 மீட்டர் தூரத்துக்கு முன்பாக, சாலையின் மீது உயரத்தில் பிரம்மாண்டமான வழிகாட்டிப் பலகை வைக்கப்பட்டிருக்கும். அதில் சாலையில் செல்லக் கூடிய நகரங்களுக்கான பெயர், அதன் தொலைவு, சாலை பிரியும் திசை ஆகியவை இருக்கும்.

இதனால், வாகன ஓட்டிகள் முன்கூட்டியே வேகத்தை குறைத்து, செல்ல வேண்டிய திசையில் வாகனத்தை சரியாக வளைத்துச் செல்ல முடியும். ஆனால், பட்டர்பிளை மேம்பாலத்தில் அதுபோல இல்லை. இதனால், இரவு நேரம் மட்டுமல்ல, பகல் நேரத்திலும் வாகன ஓட்டிகள் குழப்பத்தில் சிக்கி தடுமாறுகின்றனர்.

இதேபோல, சேலம்- அரியானூர் மேம்பாலத்தில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகை சற்று முன்கூட்டியே வைக்கப்படாமல், பாலத்தின் அருகில் இருப்பதால், திருச்செங்கோடு செல்பவர்கள் பாலத்தின் மீது ஏறிவிட்டு, பின்னர் திரும்பி வரும் சூழல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதனை கவனித்து, விபத்தில்லா பயணத்தை மக்களுக்கு உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்